இலங்கை செய்திகள்

தவறு செய்து விட்டேன் – ஆனால் பதவி விலக மாட்டேன் – ஜனாதிபதி

தவறு செய்து விட்டேன் – ஆனால் பதவி விலக மாட்டேன் – ஜனாதிபதி

ரசாயன விவசாயத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஒப்புக்கொண்டுள்ளதால் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளார்.

அதே சமயம், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு பொறுப்பேற்று தாம் பதவி விலகப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் கோபம் தமக்கு நன்கு புரிகிறது என்று கூறினார்.

அரசாங்கம் தவறுகளை செய்துள்ளதாகவும், நாட்டின் நன்மைக்காக முன்னோக்கிச் செல்ல அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் ஒரு திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை (IMF) மிகவும் முன்னதாகவே அணுகியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்..

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு மத்தியில், மக்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக மிகவும் வருந்துகின்றேன்.
வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற வரிசையில் நின்று நேரத்தைச் செலவழிப்பதால் ஏற்படும் வேதனையும் அசௌகரியமும் கோபமும் மிகவும் நியாயமானது.

கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும்.

எந்த சிரமத்திற்கும் சவாலுக்கும் மத்தியிலும் அந்தப் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை நியமித்த மக்களிடம் உறுதியளிக்கிறேன்.

தற்போது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகளில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டியது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே ஆகும்.

அதைத் தீர்க்காமல் வேறு எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது.
எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நான் ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.

அதன் அடிப்படையான மற்றும் முக்கியமான நடவடிக்கைகளாக புதிய நிதியமைச்சர் ஒருவர், நீண்டகால அனுபவமுள்ள மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் எனக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச அனுபவமும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் உயர் அங்கீகாரமும் கொண்ட மூன்று பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளேன்.

மேலும், அரசுக்கு உதவுவதற்காக பொது மற்றும் தனியார் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவுடன் இணைந்து கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்த நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

எண்ணெய், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுள்ளோம்.

மேலும், உலக வங்கி எரிவாயு, உரம், பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு தற்போது நாட்டுக்கு கிடைக்கப் பெற்றாலும், சமீப நாட்களாக அது முறையாக விநியோகிக்கப்படவில்லை.

இதன் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் நாம் தற்போது செயற்பட்டு வருகின்றோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

(பிபிசி தமிழ்)

Related Articles

Back to top button