இந்திய செய்திகள்

நீட் தேர்வில் 664 மதிப்பெண் – டாக்டர் கனவை நினைவாக்கிய ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகன்

நீட் தேர்வில் 664 மதிப்பெண் – டாக்டர் கனவை நினைவாக்கிய ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகன்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி மற்றும் மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் ஜீவித் குமார் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

இவர் நீட் தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அருகில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதி உள்ளார் ஜீவித் குமார் ஆனால் அப்போது அவரால் அதிக மதிப்பெண்களை பெறமுடியவில்லை

அதன்பின் ஓராண்டு காலமாக ஆசிரியர்களின் உதவியோடு, நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில் பயின்ற ஜீவித் குமார், தற்போது நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

ஜீவித் குமார் இந்திய அளவில், தரவரிசைப் பட்டியலில் 1123 வது இடத்தையும் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து இந்திய அளவில் மதிப்பெண் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஜீவித் குமாருக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீவித் குமாரின் தந்தை ஒரு ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி ஆவார். தாய் மகேஸ்வரி தையல் தொழில் செய்பவர்.

நீட் நுழைவுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 8வது இடமும் பிடித்துள்ளார்.

நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த இவர், இரண்டாவது முயற்சியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஸ்ரீஜன், “எனது ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோயில்.

எனது தந்தை சொந்தமாக ஸ்பின்னிங் மில் வைத்துள்ளார். எனது அம்மாவிற்கு மருத்துவராக வேண்டும் என ஆசை. ஆனால், அவரால் மருத்துவம் படிக்க முடியவில்லை.

என்னை மருத்துவராக்க வேண்டும் என எனது பெற்றோர் ஆசைப்பட்டனர். எனக்கும் உயிரியல் பாடங்களில் தான் ஆர்வம் அதிகம். 2019ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் நீட் தேர்வுக்கு தயார் செய்தேன்.”

“சென்ற ஆண்டு 385 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. மனம்தளராமல் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்தேன். நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு படித்தேன். எனக்காக என் அம்மா சொந்த ஊரிலிருந்து நாமக்கல் வந்து என்னை பார்த்துக்கொண்டார்.”

“இந்த ஆண்டு 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றிக்காக எனக்கு உறுதுணையாக இருந்து நம்பிக்கையளித்த எனது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்த பாடத்தையும் வெறுப்பாகவோ, சுமையாகவோ நினைத்து படிக்கக்கூடாது. ஆர்வத்தோடு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான பயிற்சிக்கும், மனம்தளராத எனது முயற்சிக்கும் பலன் கிடைத்ததாக இப்போது உணர்கிறேன்” என கூறினார்.

தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற ஓபிசி பிரிவினர் பட்டியலில் இவர் முதல் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோஹனபிரபா 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

தேசிய அளிவில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவிகள் பட்டியலில் இவர் 14வது இடத்தைப் பிடித்துள்ளார். தேசிய அளவிலான மொத்த பட்டியலில் 52வது இடத்தில் உள்ளார்.

Related Articles

Back to top button