இந்திய செய்திகள்

நீட் தேர்வில் 460 மதிப்பெண் பெற்ற லாரி ஓட்டுநர் மகள் : நனவான மருத்துவப் படிப்பு கனவு!

நீட் தேர்வில் 460 மதிப்பெண் பெற்ற லாரி ஓட்டுநர் மகள் : நனவான மருத்துவப் படிப்பு கனவு!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மகள், ‘நீட்’ தேர்வு மூலம் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார். அவருக்கு, கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப்பள்ளியில் படித்து, நீட் தேர்வு எழுதி தேர் வாகும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளி மாணவி

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வரதன் – சாந்தி தம்பதியின் மகள் ஹரிதா (17). 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்.

கந்திலி அடுத்த நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 530 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த ஹரிதா நீட் தேர்வு எழுத தீவிர பயிற்சி பெற்று வந்தார்.

இதையடுத்து, நீட் தேர்வில் 720-க்கு 460 மதிப்பெண்கள் பெற்ற ஹரிதா முதல் முயற்சியிலேயே 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்.

இதையறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து மருத்துவம் படிக்க உள்ள மாணவி ஹரிதாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

தலைசிறந்த மருத்துவராக…

அதேபோல, திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் மாணவியை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பள்ளிப் படிப்பைப்போலவே மருத்துவப் படிப்பிலும் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவராக வந்து ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என வாழ்த்தினார்.

Related Articles

Back to top button